எஸ்.எஸ்.ஏ திட்ட நிதியை வழங்காமல் காலம் தாழ்த்துவது துரதிருஷ்டவசமானது’ - புரட்சித்தாய் சின்னம்மா கவலை

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்துப் பார்த்தும், மத்திய அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய ‘சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான நிதியை உடனே விடுவிக்‍க வேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான நிதியைப் பெற தேவையான அனைத்து நடவடிக்‍கைகளையும் விரைந்து எடுக்கவேண்டும் என்றும் திமுக தலைமையிலான விளம்பர அரசை புரட்சித்தாய் சின்னம்மா கேட்டுக்‍கொண்டுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்‍ஸ் வலைதளப் பதிவில், ‘சமக்ரா சிக்ஷா அபியான்' என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய முதல் தவணைக்கான தொகை 573 கோடி ரூபாயை மத்திய அரசு இன்னும் விடுவிக்காமல் காலம் தாழ்த்துவது துரதிருஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைப்பதையும், ஆசிரியர் பயிற்சி மையங்களை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு, கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 'சமக்ரா சிக்ஷா அபியான்'  என்ற திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது - இத்திட்டத்திற்கான நிதியானது மத்திய அரசும், மாநில அரசும் 60 : 40 என்ற விகிதாசார அடிப்படையில் தங்களது பங்களிப்பினை செய்து வருகின்றன - இந்நிலையில் 2024-2025-ஆம் கல்வி ஆண்டிற்கான எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இதில் மத்திய அரசின் பங்களிப்பாக 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய், அதாவது 60 சதவீத தொகை நான்கு தவணைகளில் விடுவிக்கப்படும் - அதே நேரத்தில் மாநில அரசின் பங்கு ஆயிரத்து 434 கோடி ரூபாய் என, 40 சதவீதமாக உள்ளது - இந்நிலையில் மத்திய அரசின் பங்களிப்பிலிருந்து முதல் தவணையாக 573 கோடி ரூபாய் ஜூன் மாதத்தில் விடுவிக்கப்படாமல் தாமதம் ஏற்படுவது, தமிழ்நாட்டிற்கு பாதகத்தை ஏற்படுத்தக்கூடும் - அதேபோன்று, கடந்த ஆண்டின் கடைசி தவணையான 249 கோடி ரூபாயையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது என கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு இத்திட்டத்திற்கான நிதியை இன்னும் வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலைக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது - அதேபோன்று கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பிச் செலுத்துதல், தொலைதூரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி, ஆசிரியர் பயிற்சி மற்றும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி ஆகியவையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன என்று புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், திமுக தலைமையிலான அரசுக்கு எந்தவித கவலையும் ஏற்படப்போவதில்லை - மத்திய அரசை குறை கூறிவிட்டு வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டார்கள் - இதைப்பற்றி அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தில் கூட திமுக உறுப்பினர்கள் யாருமே வாய்திறக்கவில்லை - திமுகவினர் மக்களிடம் ஏதாவது பொய் வாக்குறுதிகளை கொடுத்து அவர்களை ஏமாற்றி வெற்றி பெறுவதால் தமிழக மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை - தேசியக் கல்விக் கொள்கையை ஏற்காததால், மத்திய அரசு இந்த நிதியினை விடுவிக்காமல் காலதாமதம் செய்வதாக தமிழக அமைச்சர் குற்றம் சாட்டுகிறார் - தேசிய கல்விக்‍ கொள்கையில் சில சாதகங்கள் இருந்தாலும், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது  ஆட்சிகாலங்களில் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் அனுமதிக்கவில்லை - இந்த கொள்கையை இன்றைக்கும் அனைவரும் உறுதியுடன் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம் - திமுக தலைமையிலான அரசு மத்திய அரசைக் குறை கூறி தப்பித்துக்கொள்வதை விட்டுவிட்டு, தமிழகத்திற்கான நிதியை பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளவேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தமிழகத்தில் உள்ள மாணவச்செல்வங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை சிந்தித்து பார்த்தும் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்திற்கான நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் - மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான நிதியை பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்வதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day