எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணைகள் வேகமாக நிரம்பி வருவதுடன், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதுடன், சில பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரி ஆறு வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உள்ளது.
இதனால் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்குவதற்கும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் குளிப்பதற்கும் மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டிருப்பது 5வது நாளாக நீடித்து வருகிறது.