எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருப்பூரில் குவியல் குவியலாக போதை புகைக்க பயன்படுத்தப்படும் ரோலிங் பேப்பர் அட்டைகள் காணப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சாவிற்கு அடிமையாகும் மாணவர்கள் புது டெக்னிக்கை பயன்படுத்துவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
தமிழகம் முழுவதும் போதை கலாச்சாரம் வருங்கால தலைமுறைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி வரும் நிலையில், மது, கள்ளச்சாராயம் வரிசையில் கஞ்சா புழக்கமும் சர்வ சாதாரணமாக மாணவ சமுதாயத்திற்கு கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவது பேரதிர்ச்சியை தருகிறது. அந்த வகையில் திருப்பூரில், கஞ்சாவை வைத்து மடிக்க பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆன்லைன் மூலம் ரோலிங் பேப்பர்களை வாங்குவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட அமர்ஜோதி கார்டன் அருகில் அரசுக்கு சொந்தமான 10 ஏக்கர் காலி நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு அருகில் உள்ள குட்டை பகுதி ஆள் நடமாட்டம் இல்லாதததால் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சி அளிக்கிறது. அடர்ந்த மரங்கள், கிணறு உள்ள இந்த பகுதியை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தாத நிலையில், போதைக்கு அடிமையான, குறிப்பாக கஞ்சா போதைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் புகலிடமாக உள்ளது.
மேலும் கஞ்சா வாங்கி வரும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் புகைப்பதற்கு பயன்படுத்தப்படும் ரோலிங்க் பேப்பர்களை ஆன்லைன் மூலம் வாங்கி அதில் கஞ்சாவை வைத்து சுருட்டி உபயோகின்றனர்.
நேரம் காலம் பார்க்காமல் பகல், இரவு என அனைத்து நேரத்திலும் போதை ஆசாமிகள் இப்பகுதிக்கு வருவதாகவும், ஏதாவது கேட்டால் தங்களிடம் சண்டைக்கு வருவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இரவு பகல் என அனைத்து நேரங்களிலும் மது, கஞ்சா என போதையில் சுற்றித்திரியும் நபர்கள் செல்போனில் மூழ்கி அங்கேயே படுத்து கிடப்பதாகவும், இதனால் பெண்கள், குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பகல் நேரத்தில் கிரிகெட் விளையாட வருவது கூட பரவாயில்லை எனவும், ஆனால் இளம்பெண்கள் உள்ள பகுதியில் இரவு நேரங்களில் அதிகம் பேர் வருவதால் எப்போதும் பயத்தில் உள்ளதாகவும் பகுதிவாசிகள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மக்கள் வசிக்கும் பகுதியில் குவியல் குவியல்களாக ரோலின் பேப்பர்களின் அட்டைகள் காணப்படும் நிலையில், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியில் போதை ஊசி, போதை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவதை ஜெயா பிளஸ் தொலைக்காட்சி அம்பலப்படுத்திய நிலையில் தற்போது, புதிய டெக்னிக்கை பயன்படுத்தி மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது, ரோலிங் பேப்பர்களை ஆன்லைனின் வாங்கி கஞ்சா புகைக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை நல்வழிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.