எழுத்தின் அளவு: அ+ அ- அ
தென்காசியில் வீட்டு உரிமையாளரிடம் வரிசூலிப்பதற்காக கடப்பாரை உடன் நகராட்சி ஊழியர்கள் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு கந்துவட்டிக்காரர்களை போல பணத்தை வசூலிக்க வந்த இவர்கள் நகராட்சி ஊழியர்கள் என்பது தான் விளங்கா திமுக ஆட்சியின் விடியலுக்கு சான்று.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட வீரகேரள விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் திவான் மஸ்தான் புகாரி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக தனது வீட்டிக்கான சொத்து வரியை கட்டாமல் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் 3 ஆண்டுகள் வரி பாக்கி தொகையான 2 ஆயிரத்து 500 ரூபாயை வசூலிக்க செங்கோட்டை நகராட்சி ஊழியர்கள் கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் சென்றுள்ளனர்.
வரிகட்டவில்லை என்றால் வீட்டை சல்லி சல்லியாக இடித்து தள்ளிவிடுவோம் என வீட்டின் உரிமையாளரை நகராட்சி ஊழியர்கள் மிரட்டியதோடு, வரி செலுத்தும் வரை இடத்தை காலி செய்ய போவதில்லை என வீட்டின் வாசலிலேயே கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் நகராட்சி ஊழியர்கள் டேரா போட்டு காத்துக்கிடந்த காட்சிகள் வெளியாகி அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வேதனை அடைந்த வீட்டின் உரிமையாளர் மஸ்தான் புகாரி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி வரிபாக்கியை செலுத்த முற்பட்ட போது, அதை நகராட்சி ஊழியர்கள் வாங்க மறுத்துள்ளனர். மேலும் வீட்டை இடிக்க தான் எங்களுக்கு உத்தரவு என்றும், வரியை வசூலிக்க நகராட்சி மேலாளர் வருவார் என கூறி அங்கேயே பல மணி நேரம் காத்திருந்தது அடாவடியின் உச்சகட்டம் என்றே சொல்லும் அளவுக்கு இருந்தது. இதனால் வீட்டின் வாசலில் கடப்பாரை மண்வெட்டியுடன் காத்திருந்த நகராட்சி ஊழியர்களின் செயலால், வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தினரின் ஏளண பார்வைக்கு ஆளானது தான் மிச்சம்.
தென்காசி நகராட்சியில் மொத்தம் 56 லட்சம் ரூபாய் வரி பாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் நகராட்சி ஆணையர் கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் நகராட்சி பணியாளர்கள் வசூல் ராஜாக்களாக மாறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நகர வளர்ச்சிக்கும் நகராட்சியின் செயல்பாட்டிற்கும் வரிவசூல் என்பது முக்கியம் என்றாலும் வரி பாக்கியை வசூலிக்கிறேன் என்ற பேரில் தண்டல்காரர்களை போல நகராட்சி ஊழியர்கள் செயல்படுவது மக்கள் விரோத போக்கு என்ற ரீதியில் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது.
வரி பாக்கி இருக்கும் பட்சத்தில் வீட்டின் தண்ணீர் இணைப்பு துண்டிப்பு, மின் இணை துண்டிப்பு போன்ற முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து கடப்பாரை மற்றும் மண்வெட்டியுடன் மக்களை மிரட்டி வரிவசூலிக்கும் செயல் விளங்காத திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டையே அம்பலப்படுத்துவதாக உள்ளது.