கடலூர் : கருக்கலைப்பில் ஈடுபட்டகும்பல் கூண்டோடு கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் வேப்பூரில் மெடிக்கல் கடையில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கூறுவதோடு, கருக்கலைப்பில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டவிரோத செயலில் ஈடுபட்ட கும்பல் போலீசில் சிக்கியதன் பின்னணி குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.. 

பெண்கள் கருத்தரித்தலில் தனியார் மருத்துவமனைகள் பல சர்ச்சைகளில் சிக்குவது ஒருபுறம் என்றால், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பாலினத்தை கண்டறிந்து வெளிப்படுத்துவது மற்றொரு பிரச்சனை. பிறக்க போகும் குழந்தை ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்வதற்காக மக்களும் பல சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்களை நாடி செல்கின்றனர். 

அந்த வகையில் கடலூரில் மெடிக்கல் கடையில், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கூறி, கருக்கலைப்பிலும் ஈடுபட்ட கும்பல் போலீசில் சிக்கியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவருடைய மகன் மணிவண்ணன். இவர் கடலூர் மாவட்டம் கழுதூர் கிராமத்தில் ஓம் சக்தி என்னும் பெயரில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். இந்த மெடிக்கலில் கௌதமி என்ற இளம்பெண் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். இங்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக காவல்நிலையத்திற்கு புகார் சென்றுள்ளது. 
 
இதன்பேரில் ஓம் சக்தி மெடிக்கலுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். மெடிக்கலில் போலீசார் ஆய்வு செய்தபோது, அங்கு கருவில் உள்ள குழந்தையை கண்டறிவதற்கான ஸ்கேன் இயந்திரம், கருக்கலைப்பிற்கு வழங்கப்படும் மாத்திரைகளும் இருந்துள்ளன. 

இதையடுத்து குற்ற செயலை உறுதி செய்த போலீசார், மெடிக்கல் உரிமையாளர் மணிவண்ணன், மருந்தாளுநர் கௌதமி, புரோக்கர்கள் கண்ணதாசன், தினேஷ்‌ ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் ஸ்கேன் இயந்திரம், கருக்கலைப்பு மாத்திரைகள், கருக்கலைப்பிற்கு பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். 

Night
Day