கன்னியாகுமரியில் கந்து வட்டிகும்பல்களுக்கு சப்போர்ட்... பெண் எஸ்.ஐ-க்கு எதிராக கொதித்தெழுந்த பெண்கள்...

எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரியில் அதிகரித்து வரும் கந்துவட்டி கும்பல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மாவட்ட குற்றப்பரிவு உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி தனியார் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காண்போம்...

கந்து வட்டி கும்பலின் அராஜகத்தை தாங்க முடியாமல் பலர் உயிரை மாய்த்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் விளம்பர அரசோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியபோக்குடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவரம்பு பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தலைமையில் தனியார் சுய உதவி குழு மற்றும் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் அரசு வங்கிகளில் இருந்து கடற்கரை கிராமங்களில் பெண்கள், பொதுமக்களுக்கு கடன் வாங்கிக் கொடுப்பதும் அந்த கடன் தொகையை மாதா மாதம் வட்டியுடன் பிரித்து வங்கியில் செலுத்தும் பணியை செய்து வருகின்றனர்.

இதனிடையே, கடற்கரை கிராம மக்கள் அரசு வங்கிகளில் கடன் பெறுவதற்கு முன் அப்பகுதி கந்துவட்டி கும்பலிடம் அதிக வட்டிக்கு கடன் பெற்று அதனை கட்ட முடியாமல் திணறி வந்துள்ளனர். இதனால் பல்வேறு இன்னல்களை கடன் கொடுத்தவர்களுக்கு கந்துவட்டிகாரர்கள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு வங்கிகளில் இருந்து குறைந்த வட்டிக்கு இந்த தனியார் சுயஉதவி குழுவினர் குறைந்த வட்டிக்கு கடன் பெற்று தந்ததால், அதனை இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி பயன்பெற்று வந்தனர். இதனால் கந்துவட்டி கும்பல்களுக்கு தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தங்கள் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று கடற்கரை கிராமங்களில் வங்கிகளில் கடன் வாங்கிய மக்களிடம் சென்று கடன்களை திருப்பி செலுத்த வேண்டாம் என அடாவடி செய்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக கடன் தொகை பிரிக்க செல்லும்  தனியார் சுய உதவி குழு பெண்கள்,  காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு இதற்கு விசாரணை அதிகாரியாக நாகர்கோவில் மாவட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயந்தி நியமனம் செய்யப்பட்டார். 

ஆனால் உதவி ஆய்வாளர் ஜெயந்தியோ மனு அளித்தவர்களின் பிரச்னைகளை கேட்காமலும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீதும் விசாரணை எதுவும் நடத்தாமலும் அவர்களுக்கு சப்போர்ட் செய்து வழக்கை முடிக்க வேண்டும் என கோரி தங்களை மிரட்டி வருவதாக சுய உதவிக்குழு பெண்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் விசாரணை அதிகாரி ஜெயந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பி அலுவலகத்தில் பெண்கள் புகார் அளித்துள்ளனர். விசாரணை அதிகாரியே இதுபோன்று நடந்து கொண்டால்  எங்கு சென்று தங்கள் பிரச்சனைகளை கூறுவது என பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

Night
Day