கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் 2 நாட்கள் தியானம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை கன்னியாகுமரி வருகை தர உள்ளதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்புடன் 3 ஆயிரம் போலிசார் குவிக்கப்பட்டு கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் 3 நாட்கள் சுற்றுலா படகு சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், பிரதமர் போட்டியிடும் வாரணாசி தொகுதி உட்பட 57 தொகுதிகளில் கடைசி கட்ட வாக்குப்பதிவு வரும் ஒன்றாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரை வரும் 30-ஆம் தேதியுடன் ஓய்கிறது. இந்நிலையில், தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, பரப்புரை முடியும் நாளில் கன்னியாகுமரிக்கு வந்து, விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடிக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து நாளை பிற்பகல் திருவனந்தரபுரம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகை தரும் அவர், படகு மூலம் கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்கிறார். அங்கு நாளை முதல் தியானத்தில் ஈடுபட உள்ள பிரதமர் மோடி, வரும் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார். 

இதனிடையே, பிரதமரின் வருகையை முன்னிட்டு, கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்புடன் 3 ஆயிரம் போலிசார் குவிக்கப்பட்டு, கன்னியாகுமரி முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக, கன்னியாகுமரியில் நாளை முதல் ஜூன் 1ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுலா படகுகள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Night
Day