கரும்பு விவசாயிகளை ஏமாற்றிய விளம்பர அரசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024-25 வேளாண் நிதிநிலை அறிக்கையில் தேர்தல் வாக்குறுதியின் படி கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில் கரும்பு விவசாயிகளுக்கு கொள்முதல் விலையை உயர்த்தாததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கரும்புக்கு டன் ஒன்றிற்கு 2ஆயிரத்து 919 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது, ஊக்கத்தொகை என்ற பெயரில் கரும்பு டன் ஒன்றுக்கு 215 ரூபாய் உயர்த்தி வழங்குவதாக தெரிவித்து இருப்பது வெறும் கண்துடைப்பு என விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

திரைப்படத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்றவற்றிற்கு 500 கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாய் என பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் விவசாயத்திற்கு சொற்ப அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையை திறப்பதாக நடவடிக்கை எடுப்பதாக கடந்த பட்ஜெட்டில் திமுக அரசு தெரிவித்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் சர்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கால்வாய்களை தூர்வாரும் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி மிக குறைந்த அளவாக உள்ளதாகவும், கரும்பு கொள்முதல் விலை, நெல் கொள்முதல் விலையை உயர்த்தாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், உரத்திற்கான மானியம், விதைக்கான மானியம் என திமுக அரசு அறிவிக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

விவசாயத்திற்கு சிறிய அளவில் தொகையை ஒதுக்கிவிட்டு விஞ்ஞான முறையில் ஊழல் செய்யும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், சிறு குறு விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் பயனளிக்காது என்றும், வசதி படைத்தவர்களுக்கும், பண்ணையார்களுக்கும் பலனளிக்கக்கூடிய பட்ஜெட் எனவும் தெரிவித்துள்ளனர்.






Night
Day