கரூர் சுங்கக் கட்டணம் 10 ஆண்டுகளாக மோசடி வசூல்! 10-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

சுங்கச் சாவடியை மூடி போராட்டம் நடத்தியவர்கள், 4 வழிச்சாலை அமைக்காமல் 10 ஆண்டுகளாக சுங்கக் கட்டணம் வசூலித்திருப்பதாக குற்றம்சாட்டினர். சாலையே இல்லாமல் வசூலா என வாயைபிளக்க வைத்த விவகாரத்தை பார்க்கலாம்...

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மணவாசியில் உள்ள சுங்கச் சாவடியில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி வந்தனர். அவர்கள் வசூலிப்பதற்கும், சாலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பதாக வேதனை தெரிவித்து வந்த நிலையில், 12 ஆண்டுகளாக அந்தச் சுங்கச் சாவடி வசூலை வாரிக்குவித்தது... இந்த நிலையில் தான், அவர்கள் வசூல் செய்தது மோசடியானது என்பது தெரியவந்து அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த சுங்கச் சாவடி வழியாக கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்ட தலைவர் உள்ளிட்டோர் காரில் சென்றிருக்கிறார்கள். அப்போது, சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. அதில், எத்தனை கிலோ மீட்டருக்கு இந்த சுங்கக் கட்டணம் என கேட்டபோது, அவர்கள், சுக்காலியூரில் இருந்து மணவாசி வரை உள்ள 22 கிலோ மீட்டர் என்ற தொலைவை 22 மைல் என குறிப்பிட்டு ஏமாற்றியது தெரியவந்தது... 

இதனால், கொந்தளித்த கட்சி நிர்வாகிகள், உடனடியாக சுங்கச் சாவடியில் வசூலிப்பதை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.. கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்புமாறு கோரிய நிலையில், அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதனால், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன. தகவலறிந்து வந்த காவல்துறையினர், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கட்டணம் வசூலிக்காமல் வாகனங்களை அனுப்புமாறு கோரியதால் சலசலப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை கொள்கையின்படி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு 40 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி தான் அமைந்திருக்க வேண்டும் என்பது சட்ட நெறிமுறை. ஆனால், திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைக்கு வந்த போதிலும் கரூர் சுக்காலியூரிலிருந்து மாயனூர் வரை சுமார் 22 கிலோமீட்டர் வரை நான்கு வழிச்சாலையாக உள்ளது. ஆனால், மாயனூரில் இருந்து திருச்சி வரை இருவழிச்சாலை ஆக மட்டுமே உள்ளது என குற்றம்சாட்டினார். 

இதனிடையே, மணவாசியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை இல்லாமல் திருப்பராய்த்துறை அருகே இரு வழிச்சாலைக்கே சுங்கச்சாவடி அமைத்து, மோசடியாக வரி வசூல் செய்திருக்கிறார்கள் என்பதே குற்றச்சாட்டு.

தகவலறிந்து வந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் மாயனூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை தொடர்ந்து அப்போது, வரி வசூல் இல்லாமல் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

மணவாசி சுங்கச்சாவடியில் மீண்டும் சுங்க கட்டணம் வசூலித்தால் கொங்குநாடு  மக்கள் தேசிய கட்சியின் சார்பில் போராட்டம் தொடரும் என அக்கட்சி நிர்வாகிகள் எச்சரித்தனர். இதனிடையே, வழக்கம் போல் சுங்கச் சாவடியில் வரி வசூல் நடப்பதாக மக்கள் தெரிவித்தனர். அப்படி என்றால், யார் சொல்வது உண்மை? உரிய சாலை உள்ளதா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது...

Night
Day