எழுத்தின் அளவு: அ+ அ- அ
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் நடந்த மோதலில், மாநில கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மோதலில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்தது. பின்னர் கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை மற்றும் உயர்கல்வித் துறை தாக்கல் செய்த அறிக்கைகளை நீதிபதி சந்திரா ஆய்வு செய்தார். பல அறிஞர்கள் மற்றும் பிரபலங்கள் படித்துள்ள இந்த இரு கல்லூரிகளில் மாணவர்கள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.
குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள் என குறிப்பிட்ட நீதிபதி, கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க அறிஞர்கள், கல்வியாளர்கள், மனநல ஆலோசகர்கள், கல்வித்துறை உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.