கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் - தர்மேந்திர பிரதான்

எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிந்ததாகவும் ஆனால், அவர் அந்தக் கடிதத்தை நல்லெண்ணத்துடன் எழுதவில்லை என்றும் கூறினார்.

அந்தக் கடிதத்தின் மூலம் அவர் சில கற்பனையான கவலைகளைக் குறிப்பிட்டுள்ளதாகவும், மேலும் அவரது கடிதம் அரசியல் உந்துதல் நிறைந்துள்ளதாகவும் அவரது சொந்த அரசியல் வசதியைக் கருத்தில் கொண்டு கடிதம் எழுதப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார். பிரதமர் மோடி அரசு, தமிழ்நாட்டின் மொழி மற்றும் பாரம்பரியத்தை மகிமைப்படுத்துவதில் உறுதியாக உள்ளதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

உலகளாவிய தேவையை ஆராய்ந்து, இந்தியா புதிய உயரங்களை நோக்கி முன்னேறி வருவதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு 34 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். எந்த வகையிலும், தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைக்கவில்லை என்றும் இந்த தவறான தகவல் மற்றும் பொய்யை பொறுப்பான நபர்கள் பரப்பக்கூடாது என அறிவுறுத்தினார். 

ஆனால் நாம் அந்நிய மொழியை அதிகமாகச் சார்ந்திருப்பது தீர்வாகாது என்றும் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல்  இருப்பதன் மூலம், நமது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலகளாவிய மற்றும் அகில இந்திய வாய்ப்பை இழக்கிறோம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

கல்வியை அரசியலாக்கக்கூடாது, தவறாக சித்தரிக்கப்பட்ட உண்மை எதையும் தீர்க்கப் போவதில்லை எனக் கூறிய தர்மேந்திர பிரதான், PM SHRI பள்ளிகளை செயல்படுத்தாமல் தமிழ்நாடு 5 ஆயிரம் கோடி ரூபாயை இழப்பதாக கவலை தெரிவித்தார். அரசியல் வேறுபாட்டிற்கு அப்பால், குறுகிய மனப்பான்மையிலிருந்து உயருமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

Night
Day