களைகட்டிய கூத்தாண்டவர் திருவிழா - ஒய்யார நடைபோட்ட திருநங்கைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக அழகி போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
வருடந்தோறும் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா குறித்து விரிவாக காணலாம்...

திருநங்கைகளின் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் ஒரு விழா கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் கூத்தாண்டவர் திருவிழா 20 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்காக கூத்தாண்டவர் திருவிழா கடந்த மாதம் 5ம் தேதி மகாபாரத சொற்பொழிவுடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்றது.

இந்த திருவிழாவில் பங்கேற்க திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான திருநங்கைகள் வேடந்தவாடியில் குவிந்தனர். விழாவின் 19 ஆம் நாள் நிகழ்வாக வெவ்வாய்கிழமை இரவு, திருக்கோயிலில் திருநங்கைகள் பொங்கல் வைத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு படைத்தனர். மேலும்,  பெண் அழைப்பு நிகழ்ச்சி, திருநங்கைகளுக்கான தாலி கட்டும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருநங்கைகளுக்கான அழகி போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான திருநங்கைகள் பங்கேற்று, விதவிதமாக உடை அணிந்து வந்து ஓய்யாரமாய் நடந்து, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர். போட்டியில் சென்னையை சேர்ந்த பௌர்ணமி முதல் பரிசையும், சேலத்தை சேர்ந்த மிதுளா இரண்டாவது பரிசையும், தஞ்சாவூரை சேர்ந்த ஜில்லு மூன்றாவது பரிசையும் தட்டி தூக்கினர். கூத்தாண்டவர் திருக்கோயில் நடைபெற்ற அழகி போட்டியினை காண திருவண்ணாமலை, வேடந்தவாடி, மங்கலம், அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.

இதேபோல், புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய நிலையில், ஊரணி பொங்கல் படைத்தல் நிகழ்ச்சி, கூத்தாண்டவருக்கு திருக்கல்யாணம், பக்தர்களுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தாலி கட்டிக்கொண்டனர்.

தொடர்ந்து திருநங்கைகளுக்கான அழகி போட்டி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் பாரம்பரிய உடைகளிலும், இரண்டாவது சுற்று மார்டன் உடைகளிலும்,  மூன்றாவது சுற்றில் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக நடனத்துடனும் திருநங்கைகள் பங்கேற்றனர். இதில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு வண்ண வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்திழுத்தனர். போட்டியில் பாகூரை சேர்ந்த சாக்‌ஷி என்ற திருநங்கை முதலிடத்தை பிடித்து மிஸ் பிள்ளையார்குப்பம் பட்டத்தை தட்டிச் சென்றார். இரண்டாம் இடத்தை ருத்ராவும், மூன்றாம்  இடத்தை தானஸ்ரீயும், நான்காம்  இடத்தை ஐஸ்வர்யாவும், ஐந்தாம் இடத்தை அன்னயாவும் பிடித்தனர். 

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளை ஒன்றிணைக்கும் விழாவாக கூத்தாண்டவர் திருவிழா அமைந்துள்ளதோடு, திருநங்கைகள் சந்தித்துக்கொள்ளவும், தங்கள் உணர்வுகளைப் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும், கலைகளை வெளிப்படுத்தவும் இந்த விழா வழிவகை செய்கிறது. மேலும், இந்த விழாவிற்கு மக்கள் அளிக்கும் ஆதரவு மூன்றாம் பாலினத்தவர் மீது தமிழ் சமுதாயம் வைத்திருக்கும் மரியாதையையும், அக்கறையையும் காட்டுகிறது என்பது மிகையல்ல...

Night
Day