கள்ளக்குறிச்சி - கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நேற்று கண்கள் மங்கி, வயிற்று வலி ஏற்பட்டதால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதலில் 4 பேர் பலியானதை தொடர்ந்து அடுத்தடுத்து உயிரிழப்புகள் தொடர்ந்து வருகின்றன. 

மேலும் பலர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவமனை, சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 25 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும், சேலம் மருத்துவமனையில் 10 பேரும், விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. சமய்சிங் மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கள்ளச்சாராய வழக்கு விசாரணை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ் மற்றும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை உறவினர்கள் கருணாபுரம் கொண்டு சென்றனர். அங்கு சில சதுர அடி இடைவெளியில் அடுத்தடுத்த வீடுகளில் சடலங்கள் வைத்து உறவினர்கள் கதறி அழுதனர். அருகருகே உள்ள வீடுகளில் தலா ஒருவர் பலியானதால் வீடுகள் தோறும் சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு, கிராமம் முழுவதும் மரண ஓலமாக காட்சியளிக்கிறது. 



Night
Day