கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மக்கள் எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி அளித்த தொலைக்காட்சி நேர்காணல்கள் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. அப்போது, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு, சிபிஐ விசாரணை கோரிய மனுவில் எந்த உத்தரவும் பிறக்கவில்லை என்றும், உயிரிழப்பு தொடர்பாக மட்டுமே விசாரிக்கவுள்ளோம் என்பதை குறிப்பிட்டுள்ளது. கல்வராயன் மலைப்பகுதியில் உள்ளவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் இல்லாததால் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலை உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், அப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர், மத்திய, மாநில பழங்குடியின நலத்துறை, தமிழக டி.ஜி.பி., சேலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பி.க்கள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.