காங்கிரஸ் - திமுக அரசால் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அப்போதைய காங்கிரஸ் - திமுக அரசால் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் போராடி வரும் மீனவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தார். இதுகுறித்து தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், துன்பத்தில் உழலும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளின் வறியநிலைக்கும் வாழ்வாதார பாதிப்புகளுக்கும் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றுவட்டார கடல் பகுதிகளில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன்மூலம், அப்போது மத்தியிலும் தமிழ்நாட்டிலும் ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்ததாக தமிழக ஆளுநர் குற்றம் சாட்டியுள்ளார். 

அன்றிலிருந்து இன்று வரை இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு  மீனவர் சமூகம் இன்னல்களை அனுபவித்து வருவதாகவும், இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் பிரச்சினையை அரசியலாக்குவதற்குப் பதிலாகவும், மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாகவும், ஆக்கபூர்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால் அது பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு பெரிதும் உதவும் என தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, 1974-இல் நடந்த தவறுக்கு சம பொறுப்பு, அன்றைய மத்திய ஆட்சி கூட்டணியில் இருந்த இன்று மாநிலத்தை ஆளும் கட்சிக்கும் உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

Night
Day