எழுத்தின் அளவு: அ+ அ- அ
சின்ன சேலம் அருகே நைனார்பாளையம் கிராத்தை சேர்ந்த 85 வயது மூதாட்டி காணமல் போன நிலையில் இரண்டு நாட்களுக்கு பின் தானாகவே வீடு திரும்பிய சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டியை குடும்பத்தினர் சாலையில் விட்டுவிட்டனர் என சமூக வளைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், உண்மையில் என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவருடைய மனைவி மூதாட்டி சீதா. 85 வயதான இவருக்கு, 2 மகன்கள் இருந்த நிலையில், இளையமகன் முருகேசன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் மூதாட்டி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மூதாட்டி சீதாவை மூத்த மகனின் முருகேசனின் மகன்கள் தனசேகர் மற்றும் குமார் ஆகியோர் தங்களுடன் வைத்து பராமரித்து வந்துள்ளனர்.
தள்ளதா வயதிலும் மூதாட்டி சீதா, சேலம் மாவட்டம் ஆணையம் பட்டி கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரி கொளஞ்சியம்மாள் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் திங்கள் கிழமையன்று சகோதரி வீட்டிற்கு செல்வதாக புறப்பட்டு சென்ற மூதாட்டி காணாமல் போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே மூதாட்டி சகோதரி வீடிற்குசெல்வதற்கு பதில் வழிதவறி வாழப்பாடி அருகே சென்றுள்ளார். எங்கு செல்வது என மூதாட்டி சாலையில் தவித்த நிலையில், இதனை வீடியோ எடுத்த சிலர் மூதாட்டியை அவரது குடும்பத்தினர் சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக சமூக வளைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். இது குறித்து அறிந்த குடும்பத்தினர் வாழப்பாடிக்கு சென்று தேடியும் மூதாட்டி கிடைக்காததால் சோகத்தில் ஊருக்கு திரும்பினர்.
இந்நிலையில், மூதாட்டி சீதா புதன்கிழமை காலை 6 மணி அளவில் திடீரென வீட்டிற்கு வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். காணாமல் போன மூதாட்டி வீடு திரும்பியதால் குடும்பமே மகிழ்ச்சி அடைந்தது. வாய் பேச முடியாத தனது மூத்த மகன் முருகேசன் தங்களை விட்டுவிட்டு எங்கே போனீர்கள் என சைகையில் கேட்க கண்கலங்கிய மூதாட்டி, அவருக்கு ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தங்கள் பாட்டியை கண்ணும் கருத்துமாக பார்த்துவருவதாகக் கூறும் பேரன் தனசேகரன், பாட்டியின் சகோதரி வீட்டிற்கு அவர் செல்வதாக கூறியபோது வேண்டாம் என கூறியதாகவும், தான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பாட்டி சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், வழி தெரியாமல் தவித்த தங்கள் பாட்டியை, குடும்பத்தினர் சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டதாக சிலர் பொய்யாக சமூக ஊடகங்களில் வீடியோவை பதிவிட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
தனது பாட்டியின் பெயரில்தான் தங்கள் குடும்பத்தின் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகவும், தனது காலம் வரை சொத்துக்களை பிரிக்க கூடாது எனக்கூறியதால் பாட்டியின் ஆசைப்படியே சொத்துக்களை பிரிக்கவில்லை எனவும் தெரிவித்த அவரது பேரன், இதுநாள் வரை தங்களை பாதுகாத்த பாட்டியை எப்படி விட்டுவிடுவோம் என்றும் தெரிவித்தார்.
தள்ளாத வயதில் சகோதரியை பார்க்க சென்ற மூதாட்டி வழி தவறி தவித்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து பத்திரமாக வீடு திரும்பிய சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.