எழுத்தின் அளவு: அ+ அ- அ
கார்த்திகை தீப திருவிழா நெருங்கி வரும் நிலையில், கோவையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 13 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தையொட்டி 1 லிட்டர் முதல் 5 லிட்டர் வரையிலான அகல் விளக்குகள் தயாரித்து வருவதாகவும், அளவுக்குத் தகுந்தவாறு விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் 15 லட்சம் அகல்விளக்குகள் வரை தயாரித்து விற்பனை செய்வதாகவும், இந்த ஆண்டும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர். ஆனால், மண் கிடைப்பதில் பிரச்சனை, அரசின் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் தொழிலை நடத்துவதற்கே சிரமமாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் அரசு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும், ஆனால் அதில் ஆயிரத்து 500 ரூபாய்க்கு காதிகிராப்டில் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையால் முழுமையாக கிடைக்காத நிலை என்றும் கூறியுள்ளனர்.
மண்பாண்டம் தயாரிக்கும் கருவிகள் வாங்க மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் வருங்கால சந்ததியினரும் இந்த தொழிலில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், மண்பாண்டத் தயாரிப்புக்கான மண் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நலிந்து வரும் தொழில்களில் ஒன்றாக மண்பாண்டத் தொழில் மாறி வருகிறது. இந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பதால் அந்த தொழிலை தொடர்ந்து நடத்தி வரும் வெகு சிலரும் அதனை விட்டு விடாமல் இருக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.