எழுத்தின் அளவு: அ+ அ- அ
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் காவல்நிலையத்தில் காவலர் ஒருவர் மதுபோதையில் நிர்வாணமாக நின்று அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையின் கண்ணியத்தை காவலர் ஒருவரே சீர்குலைத்த சம்பவம் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...
வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு காவல் நிலையத்தில் அருண் கண்மணி என்பவர் காவலராக பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் சென்று கொண்டிருந்த அவர், கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகே எதிரே வந்த தனியார் வேனை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வேன் ஓட்டுநரை அழைத்துக் கொண்டு கே.வி.குப்பம் காவல் நிலையம் சென்ற அருண் கண்மணி, தன் மீது மோதுவது போல் வந்ததாக ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, பணியில் இருந்த பெண் காவலரிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பெண் காவலர், காவல் ஆய்வாளருக்கு தகவல் கொடுத்த நிலையில், நான் சொல்லியும் இன்னும் வழக்கு போடவில்லையா எனக் கேட்ட அருண் கண்மணி, உடனடியாக அவர் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி வீசி விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பெண் காவலர் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார். இந்தநிலையில் காவல் நிலையம் வந்த ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் காவலர்கள் அருண் கண்மணிக்கு ஆடைகளை அணிவித்து, மருத்துவ பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் ரகளையைத் தொடர்ந்த அருண் கண்மணி, மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மருத்துவமனைக் கண்ணாடிக் கதவுகளை உடைத்துள்ளார்.
இதையடுத்து மருத்துவர் செந்தில், வேன் ஓட்டுநர் சேட்டு மற்றும் பெண் காவலர் ஆகியோரது புகாரின் பேரில் காவலர் அருண் கண்மணி மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஏற்கனவே, அருண் கண்மணி குடியாத்தத்தில் பணியாற்றிய போது, மதுபோதையில் பானிபூரி கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டவர் எனக் கூறப்படுகிறது.
காவல் நிலையத்திலேயே நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட அருண் கண்மணி போன்றவர்களால் காவல்துறையின் கண்ணியம் மேலும் சீர்குலைவதாக குற்றம் சாட்டும் பொதுமக்கள், உரிய நடவடிக்கை அவசியம் என வலியுறுத்துகின்றனர்.