எழுத்தின் அளவு: அ+ அ- அ
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் விமான டிக்கெட் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சொந்த ஊர் செல்லும் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக விமானம் மூலம் சொந்த ஊர் செல்ல பயணிகள் ஆர்வம்காட்டி வருவதால் சென்னையில் விமான கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய பெருநகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல், வடமாநிலங்களில் இருந்து திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் அதிகரித்துள்ளது.
சென்னை – தூத்துக்குடி இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் 4 ஆயிரத்து 109 ரூபாயாக உள்ள நிலையில், இன்று விமான கட்டணம் 8 ஆயிரத்து 976 முதல் 13 ஆயிரத்து 317 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னை – மதுரை இடையே சாதாரண நாட்களில் விமான கட்டணம் 4 ஆயிரத்து 300 ரூபாயாக உள்ள நிலையில் இன்று 11 ஆயிரத்து 749 முதல் 17 ஆயிரத்து 745 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதேபோல், சென்னை - திருச்சி இடையே சாதாரண நாட்களில் 2 ஆயிரத்து 382 ரூபாயாக இருந்த விமான டிக்கெட் கட்டணம் இன்று 8 ஆயிரத்து 211 முதல் 10 ஆயிரத்து 556 வரை உயர்ந்துள்ளது.
சென்னை - கோவை இடையே சாதாரண நாட்களில் 3 ஆயிரத்து 474 ரூபாயாக இருந்த விமான கட்டணம் இன்று 7 ஆயிரத்து 872 முதல் 13 ஆயிரத்து 428 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னை- சேலம் இடையே சாதாரண நாட்களில் 3 ஆயிரத்து 300 ரூபாயாக இருந்த விமான கட்டணம் இன்று 8 ஆயிரத்து 353 முதல் 10 ஆயிரத்து 867 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இதேபோல், சென்னை - டெல்லி இடையே சாதாரண நாட்களில் 5 ஆயிரத்து 475 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 5 ஆயிரத்து 802 முதல் 6 ஆயிரத்து 877 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னை - கொல்கத்தா இடையே சாதாரண நாட்களில் 4 ஆயிரத்து 599 ரூபாயாக உள்ள விமான கட்டணம் இன்று 11 ஆயிரத்து 296 முதல் 13 ஆயிரத்து 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.