எழுத்தின் அளவு: அ+ அ- அ
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கிராம சபைக் கூட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக பயன்படுத்திய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பாலவனத்தம் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அதே சமயம், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கான சம்பள நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி திமுக சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமையில் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் இருந்த மீனா என்ற பெண், கிராம சபை கூட்டம் நடக்கும் இடத்தில் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள், மக்களை ஏன் திசை திருப்புகிறீர்கள், மத்திய அரசு 36 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளதே, அதற்கு பதில் சொல்லுங்கள் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது எனப் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரித்த பின்பு ஊதியம் வழங்குவார்கள் என்னும் போது மத்திய அரசை குறை கூறி ஒரு அமைச்சரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாமா என்றும் பெண் கேள்வி எழுப்பினார்.
பாலவநத்தம் ஊராட்சியில் வேலை பார்த்த நூறு நாள் பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் ஒரு வார சம்பளத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க 300 ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாகவும் முதியோர் மற்றும் பெண்கள் குற்றம் சாட்டினர்.
பெண்கள் மற்றும் முதியவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளால், கிராம சபைக் கூட்டத்தை, ஆர்ப்பாட்டக் கூட்டமாக காட்ட நினைத்த விளம்பர திமுக அரசின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அதிர்ச்சி அடைந்தார். இதனால் ஆர்ப்பாட்டத்தை பாதியிலேயே முடித்து விட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என்று கூறியுள்ளார். விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க திமுக அமைச்சர் திரு. கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முயற்சித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் மீனா, இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அமைச்சர் அங்கிருந்து சென்றிருக்கிறார் என்றும், கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு 39 ஆயிரத்து 339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் திமுக மோசடி நாடகமாடிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.