எழுத்தின் அளவு: அ+ அ- அ
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், நள்ளிரவில் பேருந்துகளை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வார இறுதி விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன், கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று சொந்த ஊர்களுக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், போதிய பேருந்து வசதிகள் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தனர். பல மணி நேரமாக பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் தங்கள் பொறுமையை இழந்து, அங்கிருந்த சில பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பு உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.