கிளியை வைத்து வாக்கு கேட்ட மதுரை மேயர்... உங்களுக்கு ஒரு நியாயம்... ஊருக்கு ஒரு நியாயமா...

எழுத்தின் அளவு: அ+ அ-

பாதுகாக்கப்பட்ட பறவை இனமான கிளியை வாக்கு சேகரிப்புக்கு பயன்படுத்திய மதுரை பெண் மேயரின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளர்களை சம்பவம் செய்யும் கிளிகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கையில் கிளியுடன் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தவாறே இருக்கும் இவர் தான் மதுரை மேயர் இந்திராணி. வாம்மா பொன்னம்மா நம்ம இந்திராணி அக்காவுக்கு ஒரு சிட்டு எடும்மா என சொன்ன கிளி தான் அவரை தற்போது சிக்க வைத்துள்ளது.

மதுரை நாடாளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி மற்றும் அவரது கணவர் பொன்வசந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தார் போல் அங்கு கிளி ஜோதிடரிடமிருந்த கிளியை தூக்கி இருவரும் வாக்கு சேகரித்தனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் கிளி போல் பறந்த நிலையில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கிளியை வைத்து ஜோசியம் பார்ப்பதோ, வீடுகளில் வளர்ப்பது போன்றவை கடுமையான குற்றங்கள் என வனத்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இது போன்று வெளிப்படையாக பொது இடத்தில் தேர்தல் ஆதாயத்திற்காக கிளியை பயன்படுத்திய பெண் மேயர் மீது வனத்துறை மற்றும் தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர் வலைதளவாசிகள்.

பல காலமாக பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக கிளியை வளர்ப்பது, ஜோதிடத்திற்கு பயன்படுத்துவது போன்றவை தடை செயப்பட்டு இருப்பது தெரிந்தும், மேயர் இந்திராணிக்கு இது தெரியாதா என கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்து வருகின்றனர் நடுநிலைவாதிகள். அப்படியே இதனை மறந்து இருந்தால் கூட கடந்த  இரண்டு நாட்களாக டிவி கூட பார்க்கவில்லையா இந்திராணி  என இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ஆத்திரத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர். 

சமீபத்தில் பாமக வேட்பாளருக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது செய்யப்பட்டார். கிளிகளை கூண்டுக்குள் வைத்து ஜோதிடம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் அதே கிளியை வைத்து மதுரை மாநகராட்சி மேயர் வாக்கு சேகரித்து இருப்பது சமூக வலைதளங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

உங்களுக்கு வந்தா ரத்தம் , மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Night
Day