குட்கா, கூல் லிப்பை தடை செய்ய வேண்டும்- உயர்நீதிமன்ற கிளை

எழுத்தின் அளவு: அ+ அ-

பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பயன்படுத்தியதாகவும் கூல் லிப் என்ற குட்காவை அதிகம் விற்பனை செய்ததாகவும் போலீசாரால் வழக்கு பதிவு செய்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளனர். 

இந்த வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் "கூல் லிப்" எனும் போதைப்பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது என தெரிவித்தார். ஆகவே அதனை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என அறிவித்து இந்தியா முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி கேள்வி எழுப்பினார்.

மேலும்,  நாடு முழுவதும் பள்ளி மாணவர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய நீதிபதி, முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பதை தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதுமட்டுமின்றி, போதை பொருட்கள் விற்பனையை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மத்திய அரசின் சட்டத்தில் கடுமையான திருத்தங்கள் மேற்கொள்வது குறித்து மத்திய சுகாதாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதேசமயம் ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து மாணவர்களை நல்வழிபடுத்த ஆலோசனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி பரத சக்ரவர்த்தி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Night
Day