எழுத்தின் அளவு: அ+ அ- அ
கன மழை காரணமாக பழைய குற்றால அருவியில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் தீவிர தேடுதலுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வாட்டி வந்தது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டம் குற்றால அருவிகள் தண்ணீரின்றி வறண்டு போயிருந்தன. வெறும் பாறைகளாக மட்டும் காணப்பட்ட குற்றாலத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கோடை மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை கொட்டித் தீர்க்கிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குறிப்பாக, பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. எதிர்பாராத வகையில் பெருக்கெடுத்த அதீத வெள்ளத்தால் செய்வதறியாமல் திகைத்துப் போன பயணிகள், அச்சத்தில் அலறியடித்து பதறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
காட்டாற்று வெள்ளம் போல வந்த தண்ணீரை பார்த்து சுற்றுலா பயணிகள் ஓடிய நிலையில், அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரை வெள்ளம் அடித்துச் சென்றது. அவர்களில் 4 பேரை அருகில் இருந்தவர்கள் போராடி மீட்டனர். பெற்றோருடன் குளித்து கொண்டிருந்த நெல்லையை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் அஸ்வின் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டான். இதனால் அங்கு பதற்றம் நிலவ, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினரும், ஆயுதப்படை வீரர்களும் மாயமான சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்கு பின் பழைய குற்றாலம் அருவிக்கு சற்று தொலைவில் உள்ள இரட்டை கால்வாய் பகுதியில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் தற்காலிகமாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மலைப் பகுதிகளுக்குள் பெய்த கன மழையின் காரணமாகவே இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.