எழுத்தின் அளவு: அ+ அ- அ
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் நடைபெற்ற தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான, முத்தாரம்மன் மகிஷனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நள்ளிரவு 12 மணிக்கு கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முத்தாரம்மனை தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 41 நாட்கள் விரதம் இருந்து மாவிளக்கு பூஜை, தீச்சட்டி எடுத்தல், வேல் குத்துதல் போன்ற நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தி வந்தால், வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளதால், தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து பக்தர்கள் காப்புகட்டி விரதத்தை துவங்கினர். விழா நாட்களில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் வீதி உலா செல்லும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் பக்தர்கள் நேர்த்தி கடனாக காளியம்மன், சிவன் உள்ளிட்ட கடவுள்களின் வேடம் அணிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்தனர். தசரா திருவிழாவின் 10வது நாளான சனிக்கிழமை வசூல் செய்த காணிக்கைகளை கோயிலில் பக்தியுடன் செலுத்தி வழிபட்டனர்.
இதேபோல காளி வேடம் அணிந்த பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஆடி காணிக்கை செலுத்திய பின்னர், கோவில் கடற்கரையில் சென்று அக்னி சட்டியை இறக்கி தங்களது நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். பின்னர், விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வு நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற்றது.
அம்மன் சிம்ம வாகனத்தில் மஹிஷா சூரமர்தினி கோலத்தில் எழுந்தருளினார். மக்கள் வெள்ளத்தில் கடற்கரைக்கு வந்த அம்மன், முதலில் தன் முகத்துடன் இருந்த மகிஷாசூரனை வதம் செய்தார். பின்னர் சிங்க முகமாக உருவமாறிய மகிஷாசூரனை வதம் செய்தார். தொடர்ந்து எருமை உருவம் பெற்றவனையும் வதம் செய்தார். முடிவில், சேவல் உருவமாக மாறிய மகிஷாசூரனையும் அம்மன் வதம் செய்தார்.
இந்த சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை லட்சக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர். 15 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குலசேகரன்பட்டிணம் கடற்கரையில் குவிந்திருந்ததால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.