குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
குவைத் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள அகமதி மாகாணம் மங்காப் நகரில் உள்ள 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கட்டடத்தில் தமிழகத்தை சேர்ந்த 9 பேர் தங்கியிருந்ததாக கூறப்படும் நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரத்தை சேர்ந்த ராம கருப்பண்ணன், செஞ்சியை சேர்ந்த முகமது ஹெரீப், கடலூரை சேர்ந்த சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டியை சேர்ந்த வீராசாமி மாரியப்பன், பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய் உள்ளிட்ட 5 தமிழர்கள் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. மேலும், தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு குவைத் தமிழ்ச்சங்கம் மூலம் உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த தமிழர்களின் உடல்களை இந்தியா கொண்டுவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தூதரகம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் உடலுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு உடல் யாருடையது என்று அடையாளம் காணப்படும் என்றும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் விபரங்களை தமிழ் சங்கம் மூலம் பெற்று வருவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.