குவைத் தீ விபத்து - ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியிருந்தனர். இந்த கட்டிடத்தின் சமையலறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டடத்தில் இருந்து தொழிலாளர்கள் பலர் வெளியே ஓடி தப்பிய நிலையில், அறைகளில் உறங்கி கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 49 பேர் தீயில் கரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதில், ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரை சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர், தீ விபத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உயிரிழந்த கருப்பணன் ராமு பல ஆண்டுகளாக குவைத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, குவைத்தில் தீ விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்த முகமது ஷெரீப் தங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு முகமது ஷெரீப்பை தொடர்பு கொள்ள இயலவில்லை என அவரது குடும்பத்தினர் கவலை தெரிவித்து வருகின்றனர். அவர், மங்காஃப் பகுதியில் உள்ள NBTC என்ற ஸ்டீல் கம்பெனியில் போர்மேன் ஆக பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முகமது ஹெரீப்பின் நிலை குறித்து தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். 


Night
Day