குவைத் தீ விபத்து : உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர் சென்றடைந்தன - கதறி அழுத உறவினர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் ராணுவ விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து தனித்தனி ஆம்புலன்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 3 பேரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், ஒருவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
 
குவைத் நாட்டின் அகமதி மாகாணம் மங்காப் நகரில் உள்ள 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தை சேர்ந்த ராம கருப்பண்ணன், செஞ்சியை சேர்ந்த முகமது செரீப், கடலூர் சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, கோவில்பட்டி வீராசாமி மாரியப்பன், பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராய், சென்னையை சேர்ந்த சிவசங்கர் மற்றும் திருச்சியை சேர்ந்த எபமேசன் ராஜூ உள்ளிட்டோரின் உடல்கள் ராணுவ விமானம் மூலமாக கொச்சி வந்தடைந்தது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்கள் சாலை மார்க்கமாக அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. 

சென்னையை சேர்ந்த சிவசங்கர் கோபாலின் உடல் அவரின் குடும்பத்தாரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. அரசு வருவாய் துறை மற்றும் அயலக துறை அதிகாரிகள் முன்னிலையில்   குடும்பத்தாரிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிவசங்கரின் உடல் ராயபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனின் உடல், அவரது சொந்த ஊருக்கு நேற்று இரவு 9 மணியளவில் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடலுக்கு மாவட்ட வருவாய் அலுவலர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கு நடைபெற்றபின் மயானத்தில் மாரியப்பனின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த எபமேசன் ராஜூவின் உடல், அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. உயிரிழந்த ராஜூவின் சடலத்தை கண்டு கதறி அழுத குடும்பத்தினர் மற்றும் உறவினரின் காட்சி காண்போரை கலங்க செய்தது. உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு பிறகு, இரவு அவரது உடல் நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த இளைஞர் புனாப் ரிச்சர்ட் ராயின் உடல் நேற்று நள்ளிரவு சொந்த ஊரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலை கண்டு அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். அதனைதொடர்ந்து இரவோடு இரவாகவே புனாப் ரிச்சர்ட் ராயின் உடல் கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராம கருப்பண்ணனின் உடல், ஆம்புலன்ஸ் மூலாமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடலை கண்டு அவரது மனைவி, மகன் உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுதனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவை சேர்ந்த முகமது ஷெரீபின் உடல், அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. கண்ணீர் மல்க குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்ட நிலையில், தேசூர்பாட்டை பகுதியில் உள்ள பத்தா பள்ளிவாசலில் தொழுகை நடத்திய பிறகு முகமது ஷெரீபின் உடல் நல்லடக்கம்  செய்யப்பட்டது.




Night
Day