எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அருண் நேரு உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் நடத்தி வரும் TVH கம்பெனிக்கு 30 கோடி ரூபாய் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக கடந்த 2021ஆம் ஆண்டு சிபிஐ தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ரவிச்சந்திரனின் சென்னை வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரை அழைத்து சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து நேற்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். TrueDom நிறுவனத்துக்கும் அவருக்குமான தொடர்பு? - TrueDom நிறுவனத்துக்கு உத்தரவாத கையெழுத்து போட்டது ஏன்? - உள்ளிட்டவை குறித்து ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்தனர்.
சுமார் 5 மணி நேர கிடுக்கிப்பிடி விசாரணைக்கு பின்னர் ரவிச்சந்திரனை மீண்டும் அவரது இல்லத்திற்கு அழைத்து சென்று அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரவிச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து 3 நாட்கள் நடந்த அமலாக்கத்துறை சோதனை இன்று நிறைவு பெற்றது. சோதனைக்கு பின்பு 2 பைகள் முழுவதும் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறையினர் எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரவிச்சந்திரனை அலுவலகம் வரவழைத்து அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.