கே.என்.நேருவின் மகள், மகன், சகோதரர் வீடுகளில் ED ரெய்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சகோதரர்கள், மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்‍கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் பட்டினப்பாக்கம் எம் ஆர் சி நகரில் உள்ள  ராமச்சந்திரன் வீட்டிலும், சென்னை பெசன்ட் நகரில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் மற்றொரு சகோதரர் ரவி வீட்டிலும் அலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு  எஸ்பிகே குழுமம், டிவிஎச் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி 100 கோடி ரூபாய் பணம், 90 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையின் முடிவில் அமலாக்‍கத்துறை  சோதனைக்கான முழு விவரம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும் என எதிர்பார்க்‍கப்படுகிறது.

இதேபோல், திருச்சியில் உள்ள அமைச்சர் கே என் நேரு வீட்டில் அமலாக்‍கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி தில்லை நகர் 5வது குறுக்கு தெருவில் உள்ள அமைச்சர் கே என் நேருவின் வீட்டில் மூன்று கார்களில் வந்த அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவத்தினர் மற்றும் தமிழக போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை உயர் அதிகாரி இருவர் தலைமையில், திருச்சி அமலாக்க துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியில் அமைச்சர் நேருவின் சகோதரரும், TVH உரிமையாளருமான மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவருடைய கட்டுமான நிறுவனம் கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உட்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது. இது தவிர சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கோவையில் உள்ள  TVH நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருவது குறிப்பிடத்தக்‍கது.

சென்னை பிஷப் கார்டன் பகுதியில் உள்ள கிருஷ்ணபுரி தெருவில் அமைச்சர் கே என் நேருவின் சகோதரர் ரவி வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக துணை ராணுவப் படையினர் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கேஎன்நேருவின் மகனும், எம்பியுமான அருண் நேருவின் அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அருணுக்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் அமைச்சர் நேருவின் மகள் வீட்டிலும் அமலாக்‍கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.  திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனை அருகே உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் நேருவின் மகள் டாக்டர் ஹேமப்பிரியா வீடு உள்ளது. இந்த வீட்டில் இரண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day