கையாளாகாத திமுக அரசால் 5 பேர் பலி - புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறுவன தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களில் இதுவரை 5 நபர்கள் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. சுமார் 200 நபர்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு திமுக தலைமையிலான அரசு தான் முழு பொறுப்பேற்கவேண்டும். இது திமுக தலைமையிலான அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. 

மக்கள் அதிக அளவில் கூடுகின்ற வான் சாகசம் போன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தவறிய திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர், மருத்துவ வசதி, உரிய போக்குவரத்து வசதி போன்ற எதையும் ஏற்பாடு செய்யவில்லை. ஆனால் எங்கு பார்த்தாலும் திமுகவினரின் போஸ்டர்கள் தான் ஒட்டப்பட்டு இருந்தது. திமுகவினர் இந்த போஸ்டருக்கு செய்த செலவுக்கு பதில், தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்து இருந்தால் கூட மக்கள் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். மேலும், திமுக தலைமையிலான அரசின் மெத்தனப்போக்கால் மெரினாவில் இன்னும் முடிவு பெறாமல் நடைபெற்று கொண்டிருக்கும் மெட்ரோ பணிகளுக்காக வழிகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததால், மக்கள் கடற்கரையிலிருந்து வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். இவ்வளவு மக்கள் கூடுகின்ற இடத்தில் மக்கள் வெளியேற அதிக வழிகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். மேலும், மெரினா கடற்கரையிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவ குழுக்கள் அடங்கிய ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ முதலுதவிகளை உடனே செய்திருக்கவேண்டும். ஆனால் திமுக தலைமையிலான அரசு இதுபோன்ற அடிப்படை தேவைகளைக்கூட செய்யாமல் போனதால், மயக்கமடைந்தவர்களை கடற்கரையிலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கே காலதாமதம் ஏற்பட்டு இதன் காரணமாக உயிரிழப்பும் ஏற்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லி மிகவும் வேதனைப்படுகின்றனர். அதேபோன்று மெட்ரோ நிர்வாகத்திடம் முன் கூட்டியே பேசி அதிக முறைகள் மெட்ரோ ரயில்களை இயக்க ஏற்பாடு செய்து இருக்கவேண்டும். ஆனால் இதற்காக எந்தவித ஏற்பாடுகளும் செய்யாததால் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் தான் நேற்றைக்கும் இயக்கப்பட்டன.இதைப்பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்காத திமுக தலைமையிலான அரசால் மக்கள் ரயில் நிலையங்களில் நாள் முழுவதும் காத்து கிடக்கும்அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்திய விமான படையினர் எத்தனையோ மாநிலங்களில் இது போன்று வான் சாகச நிகழ்ச்சிகளை மக்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் நடத்தி வந்துள்ளனர். ஆனால் திமுகஅரசை நம்பி சென்னையில் ஏற்பாடு செய்ததால், இன்றைக்கு இந்த துயர நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான அரசோ தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில்தான் கவனமாக இருந்ததே தவிர மக்களை காப்பாற்ற மறந்துவிட்டது. திமுக தலைமையிலான அரசு இது போன்று மக்களின் உயிரோடு விளையாடுவது எந்தவிதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. 

மாற்று கட்சியினர் ஒரு கூட்டம் நடத்துவதாக இருந்தால், எத்தனை பேர் கூடுவார்கள்?, ஆண்கள் எத்தனை பேர்?, பெண்கள் எத்தனை பேர்?, குழந்தைகள் எத்தனை பேர்?, அவர்களுக்கு கழிப்பட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை திமுக தலைமையிலான அரசு கேட்கிறது. ஆனால்  இத்தனை லட்சம் மக்கள் கூடுகின்ற ஒரு அரசு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும்செய்யாமல் வேடிக்கை பார்த்தது எந்தவிதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை.

மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு இதே மெரினாவில் லட்சக்கணக்கான இளம்வயதினர் ஜல்லிக்கட்டுக்காக ஏழு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போதுகூட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் இன்றைக்கு இந்த கையாளாகாத அரசை நம்பி மக்கள் வான் சாகச நிகழ்ச்சியை காண மெரினாவிற்கு வந்து தங்கள் இன்னுயிரை இழந்து இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.     இதில் உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும், தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

Night
Day