கொசஸ்தலை ஆற்றில் தரமற்ற வெள்ளத் தடுப்புச் சுவர்... மக்களின் வரிப்பணம் ரூ.9.10 கோடி வீணடிப்பு.

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கொசஸ்தலை ஆற்றில் கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு, 4 மாதங்களிலேயே சேதம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்புச் சுவர் கட்டுமான பணிக்கு 9 கோடியே 10 லட்ச ரூபாய் அரசு ஒதுக்கிய நிலையில், மக்கள் வரிப்பணத்தை முறையாக செலவழிக்காமல், அதிகாரிகள் அதனை பங்கீட்டு கொண்டது குறித்து விரிவாக அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கி வேலுார் மாவட்டம் காவேரிப்பாக்கம் வழியாக பூண்டி நீர்தேக்கத்தை அடையும் கொசஸ்தலை ஆறு, பின்னர் திருவள்ளூர், தாமரைப்பாக்கம், வன்னிப்பாக்கம், நாப்பாளையம் வழியாக 136 கிலோ மீட்டர் துாரம் பயணித்து எண்ணுாரில் உள்ள வங்கக்கடலில் கலக்கிறது.

மழைக்காலங்களில் பூண்டி நீர்தேக்கம் நிரம்பும் போது அதிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரங்களில் அவ்வப்போது உடைப்புகள் ஏற்பட்டு, அருகில் உள்ள கிராமங்கள் பாதிப்புக்குள்ளாவது தொடர் கதையாக இருந்து வருகிறது

அந்த வகையில், கடந்த காலங்களில் வன்னிப்பாக்கம், நாலுார், கம்மார்பாளையம், மடியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆற்றின் கரைகள் உடைந்து குடியிருப்புகளையும், விளை நிலங்களையும் வெள்ள நீர் மூழ்கடித்ததால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்

மழையாலும், பூண்டி ஏரி உபரி நீராலும் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் அதனை தவிர்க்கும் விதமாக வன்னிப்பாக்கம், மடியூர் கிராமங்களுக்கு இடையே ஆற்றின் இருபுறமும், 9 கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்த தமிழக நீர்வளத்துறையால் கான்கிரீட் வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது...

இதற்காக கரையோரங்களில் சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு சரிவுப்பகுதிகளில் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்டன. ஆனால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிமெண்ட் கற்கள் உடைந்து முற்றிலும் சேதமானது.

இந்நிலையில், நான்கே மாத காலத்திற்குள் இவை சேதம் அடைந்து உள்ளதாகவும், தரமற்ற முறையில் தடுப்புச் சுவர் அமைத்து மக்களின் வரிப்பணம் முற்றிலும் வீணடிக்கப்பட்டு உள்ளதாகவும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்

மக்களின் வரிப்பணத்தில் இருந்து இந்த பணிகளுக்கு 9 கோடியே 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அதனை விளம்பர திமுக அரசின் அதிகாரிகள் பங்கிட்டு கொண்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கரை அரிப்பை தடுக்கும் வகையில் ஜல்லி, சிமெண்ட், மணல் ஆகியவற்றை கொண்டு கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்ட வேண்டும்.

ஆனால், கான்கிரீட் கற்களுக்குப் பதிலாக ஜிப்சம், பிரிக் போன்ற தரமற்ற பொருட்களை பயன்படுத்தி வெள்ளத்தடுப்பு சுவர் கட்டப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தலைமைப் பொறியாளர் ஜானகி, பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம், செயற்பொறியாளர் இராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம் இப்படி நீர்வளத்துறையின் அதிகாரிகள் பலர் இருந்தும், வெள்ள தடுப்புசுவர் கட்டும் பணிகளை ஏன் மேற்பார்வை செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய கிராம மக்கள், இந்த முறைகேட்டுக்கு நீர்வளத்துறை அதிகாரிகளும் துணை போயிருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 

மக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப்பிடம் செய்தியாளர் கேட்ட போது, இது கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பணி எனவும், ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்... 

இதனிடையே, குழு அமைக்கப்படும் முன்னதாகவே அங்கு ராட்சத இயந்திரங்கள் கொண்டு ஊழியர்கள் பணி செய்வதை பார்க்கும் போது, தரமற்ற பணிகளை செய்து விளம்பர அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் இனி வரும் காலங்களில் மக்கள் ஒரு போதும் ஏமாற மாட்டார்கள் எனவும் சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

Night
Day