கொடைக்கானலில் மற்றொரு காதல் சின்னம்... பிரபலமாகி வரும் தூண் பாறை...

எழுத்தின் அளவு: அ+ அ-

குணா மற்றும் மஞ்சுமல் பாய்ஸ் படங்களை தொடர்ந்து குணா குகை திடீர் ட்ரெண்டானது...  குணா குகை போன்றே, காதல் கதையை மையமாக கொண்டுள்ள மற்றொரு சுற்றுலா சின்னம் தற்போது பிரபலமடைந்து வருகிறது. உண்மை காதலர்கள் நிறுவிய அடையாளமும், அது அழிந்தது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் சுற்றுலா தளத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் படையெடுப்பார்கள். தமிழகம் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும், கொடைக்கானலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மோயர் சதுக்கம் , குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுவர்.  

கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு திரைப்படமாக எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் சிறப்பான வெற்றியை பெற்றதையடுத்து, குணா குகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது.

குணா குகை பேசு பொருளாகி உள்ள நிலையில்  தூண் பாறையும் தற்போது பேசு பொருளாக மாறி உள்ளது. 400 அடி உயரம் உள்ள  தூண் பாறை  மூன்று பாறைகள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குணா படத்தில் வரும் காதல் கதையை மிஞ்சும் அளவிற்கு உண்மை சம்பவம் ஒன்று தூண் பாறையில் நிகழ்ந்துள்ளது.  இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் கெல்லி என்பவருக்கு கொடைக்கானல் மிகவும் பிடித்த இடமாக இருந்து வந்துள்ளது. டேவிட் கெல்லி, ஐரின் கெல்லி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், தனத காதல் மனைவியுடன் கொடைக்கானலுக்கு தேன்நிலவிற்கு வந்துள்ளார். அப்போது தூண்பாறை முன் நின்று புகைப்படங்கள் எடுத்துபோது ஐரின் கெல்லி தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.

காதல் மனைவி உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாத டேவிட் கெல்லி சில நாட்கள் கொடைக்கானலில் தங்கி இருந்த நிலையில், மனைவியின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில், அவரது நினைவாக இந்த தூண்பாறையின் உச்சிக்கு சென்று ஒரு சிலுவையை நிறுவி உள்ளார். பின்னர், அங்கிருந்து குதித்து டேவிட் கில்லியும் உயிரை  மாய்த்துக்கொண்டார். டேவிட் கில்லி நிறுவிய சிலுவை சில ஆண்டுகள் ஒரு சிலரால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர்  சிலுவை அழிந்து போனது. 

இங்கிலாந்திலிருந்து கொடைக்கானலுக்கு வந்த தம்பதியினர் ஒரே இடத்தில் உயிரிழந்தது ஒரு சில இணையதள பக்கங்கள் மற்றும் பழைய புத்தகங்களை மட்டுமே இடம்பெற்றுள்ளன. சவுத் இந்தியா டூரிசம்  உள்ளிட்ட ஒரு சில இணையங்களில் பார்த்து தற்போது ஒரு சிலரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதனால், தூண் பாறையை காணவும் சுற்றுலா பயணிகள் தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல், 1822 இங்கிலாந்தில் இருந்து வந்த விஞ்ஞானி ஒருவர், இந்த தூண் பாறைகளை பற்றி ஆராய்ந்ததாகவும், அவர் பாறையில் உச்சியில் இங்கிலாந்து கொடியை வைத்தாகவும் தூண் பாறையை தொலைநோக்கி மூலம் பயணிகளுக்கு காட்டும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், விஞ்ஞானியின் நினைவாக உள்ளூர் மக்கள் அவ்வப்போது உச்சிக்கு சென்று சிலுவையை வைப்பார்கள் என்றும், அந்த பாறை காற்றில் சாய்ந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிலுவையை வைக்க யாரும் செல்வதில்லை எனவும் தெரிவித்தார்.

கொடைக்கானலில், குணா குகைக்குள் தவறி விழுந்த நண்பன், தூண் பாறையில்  காதலர்களின் சிலுவை போன்ற நிகழ்வுகளை போல பல அறியப்படாத வரலாற்று பக்கங்களும் நினைவுகளும் கொடைக்கானலில் ஏராளமாக உள்ளதாகவும், இதனை ஆய்வு செய்து, அது தொடர்பான ஆவனங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day