எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், சில இடங்களில் சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இதமான சூழல் நிலவியது. மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை சோழவந்தான் பகுதியில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில தினங்களாக வெப்பத்தின் அளவு அதிகரித்து வெயில் வாட்டி வரும் நிலையில் சோழவந்தான் பகுதியில் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே கடுமையான வெயில் வாட்டி வந்தது. இதனிடையே அம்பாசமுத்திரம், மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சேர்வலாறு பகுதியில் 83 மில்லி மீட்டரும், மாஞ்சோலை பகுதியில் 74 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு அதிகாலை முதல் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை நிலவியது. மழை காரணமாக உப்பளங்களில் உப்பு உற்பத்தி மற்றும் உப்பள பாத்திகளை தயார் செய்யும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் அதிகாலை பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள் மடம், தனுஷ்கோடி போன்ற பகுதியில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குத்தாலம் பகுதியில் 20 நிமிடம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.