எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை சின்னக்குப்பத்தில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட கோரமண்டல் தொழிற்ச்சாலையை நிரந்திரமாக மூடக்கோரி, 42வது நாளாக ஏராளமான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் உர தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி குழாய் உடைந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல், மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டு, அதற்கான நோட்டீசை அந்த நிறுவனத்திடம் மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழங்கியுள்ளது. ஆனால், உர தொழிற்காலையை நிரந்தரமாக மூடக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் 42வது நாளான இன்று, சின்னக்குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தங்களுக்கு எவ்வித நஷ்டஈடும் தேவையில்லை என்றும், தொழிற்சாலையை நிரந்திரமாக மூட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் பள்ளி மாணவர்கள் தவறி விழுந்து உயிர் சேதம் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். கோரமண்டல் உர தொழிற்சாலையை நிரந்திரமாக மூடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனிடையே, சென்னை எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு தொடர்பான வழக்கு விசாரணையை, வரும் மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்தனர்.