கோவிலுக்கு சொந்தமான குளத்தை மூடிய அதிகாரிகள்... பார்க்கிங்காக மாற்றி அராஜகம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

வடசென்னைக்குட்பட்ட வியாசர்பாடியில் ரவிஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான குளத்தை, ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி, அமைச்சர் சேகர்பாபுவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் குடியிருப்புகளை இடித்து அப்புறப்படுத்தினர். குளம் இருந்த இடம் தற்போது வாகன பார்க்கிங்காக மாறியுள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில், நீர் நிலைகளை காக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக மாண்புமிகு அம்மா அறிமுகப்படுத்திய மழைநீர் சேமிப்பு திட்டம் என்ற உன்னத திட்டம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, அவ்வப்போது ஏரிகள் குளங்கள் என அனைத்தையும் குடிமராமத்து பணி செய்து, முறையாக தூர்வாரி பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த 4 ஆண்டு கால விளம்பர திமுக ஆட்சியில், ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் என நீர்நிலைகள் பெரும்பாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் அழிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், வடசென்னை பகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடியில் அமைந்துள்ள ரவிஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான குளம் இருந்த இடம் தெரியாமல் மூடப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவில் சுமார் ஒன்னேகால் ஏக்கர் பரப்பளவில் ரவீஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான குளம் இருந்தது. தற்போது அதன் அருகே சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகள் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி, அமைச்சர் சேகர்பாபுவின் கட்டுபாட்டில் உள்ள, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் வீடுகளை இடித்து, குடியிருப்பு வாசிகளை அப்புறப்படுத்தினர்.

வீடுகளை இடித்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், அந்தப் பகுதியில் மீண்டும் குளத்தை சீரமைப்பார்கள் எதிர்பார்த்திருந்த மக்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. குளம் இருந்த இடமே தெரியாத அளவுக்கு கட்டிட கழிவுகளை போட்டு குளத்தை முழுவதுமாக மூடி உள்ளனர். 

ஒன்னேகால் ஏக்கர் பரப்பளவு கொண்ட ரவீஸ்வரர் ஆலயத்தின் குளத்தில், பாலகிருஷ்ணன் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கும் மழை நீர் திருப்பி விடப்பட்டிருந்தது. தற்போது அந்தக் குளம் முழுவதும் கட்டிடக்கழிவுகளால் மூடப்பட்டு தனியார் வாகனங்களுக்கு பார்க்கிங் செய்வதற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள்.

குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டினார்கள் என்ற காரணத்திற்காக ஈவு இரக்கமின்றி கட்டிடங்களை இடித்து விட்டு நடவடிக்கை எடுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், தற்போது குளத்தை மூடி எதிர்காலத்தில் அப்பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு அடித்தளமிட்டுள்ளதாக குமுறுகின்றனர் மக்கள்...

ஆகவே வாகன பார்க்கிங்கை அகற்றி, குளத்தை முழுவதுமாக தூர்வாரி, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே வியாசர்பாடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day