கோவையில் பிரதமர் மோடி 'ரோடு ஷோ' - சாலையின் இருபுறங்களில் இருந்தும் பூக்களைத் தூவி உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட வாகன பேரணியில் பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நேற்று கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சாய்பாபா காலனிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சாய்பாபா காலனி பகுதியில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரை இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அவரது வாகனத்தில் உடனிருந்தனர். ரோடு ஷோ நிகழ்ச்சியின்போது சாலையின் இருபுறங்களிலும் இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பேரணி நடைபெற்ற சாலைகளின் இருபுறங்களிலும் பாரம்பரிய நடனத்துடன் கூடிய கலை நிகழ்ச்சிகளும், இசை கச்சேரிகளும் நடைபெற்றன. இதனை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.

இதையடுத்து ஆர்.எஸ்.புரத்தில் தனது வாகன பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி, 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு அங்கு அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி பந்தய சாலை பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று இரவு தங்கினார்.

பின்னர் இன்று காலை 9.30 மணிக்‍கு கோவை விமான நிலையத்திற்கு கார் மூலம் சாலை மார்க்கமாக செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். பாலக்காட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து காலை 11.40 மணிக்‍கு ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு செல்ல உள்ளார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார். இந்தக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பின்னர் பிற்பகல் 2 மணிக்‍கு சேலம் விமான நிலையம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து 2. 25 மணிக்‍கு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.



Night
Day