எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வரு்கின்றனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வரை 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கார் குண்டு வெடிப்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை, நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில், பெரம்பூர், வில்லிவாக்கம், ராயலா நகர், பல்லாவரம், திருவிக நகர், ராமாபுரம் உட்பட 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீட்டில் அதிகாலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், போத்தனூர் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். உக்கடத்தில் ஏசி மெக்கானிக் அபிபூர் ரகுமான் என்பவர் வீட்டில் NIA அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் சோதனை நடத்தினர்.
மதுரை மாவட்டம் ஹாஜிமார் தெருவில் உள்ள அலி ஜிகாத் என்பவர் வீட்டில் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் அலி ஜிகாத்க்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் திருச்சியில் 2 இடங்களில் NIA அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள கூனி பஜாரை சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டிலும், அல்லிமால் தெருவில் உள்ள அகமது அலி என்பவர் வீட்டிலும் NIA அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள சுலைமான் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் சுலைமானுக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.