கோவை நகரில் பாஜக புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியில் பா.ஜ.க.,வின் புதிய மாநகர அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதனை திறந்து வைக்க வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, மாநில தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். புதிய அலுவலகத்தில் நடராஜர் சிவகாமி சிலையை வணங்கிய அமித்ஷா, ரிப்பன் வெட்டி திறக்காமல், முடிந்து இருந்த பூ மாலையை பிரித்து அலுவலத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, பசுவுக்கு கீரை உணவளித்து மகிழ்ந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக அலுவலகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டார். பின்னர் புதிய அலுவலகத்தில் பா.ஜ.க நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
இதனிடையே இன்று இரவு பூண்டி வெள்ளிங்கிரியில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பங்கேற்கும் அமித்ஷா, நாளை காலை தனி விமானத்தில் டெல்லி புறப்படுகிறார்.