சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபுவும் அவமரியாதையாக பேசினர் - வேல்முருகன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் சேகர்பாபுவும் தன்னை அவமரியாதையாக விமர்சித்து பேசியது வருத்தம் அளிப்பதாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. விவாதத்தில் கலந்துக்கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் பேசியபோது குறுக்கிட்ட அமைச்சர் சேகர்பாபு, எதற்கு எடுத்தாலும் முந்திரிக் கொட்டை போல் வேல்முருகன் பேசுவதாக விமர்சித்தார். இதனால் கோபமடைந்த வேல்முருகன் தன்னை ஒருமையில் பேசியது தவறு என அமைச்சர் சேகர் பாபுவை பார்த்து சுட்டிக்காட்டி பேசினார். 

உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதரவாக, வேல்முருகனை கடுமையாக சாடி பேசினார். கூட்டணிக் கட்சி வைக்கும் கோரிக்கை என்னவென்று கூட தெரியாமல் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர் அதிகபிரசிங்கத்தனமாக பேசுவதாகவும் சட்டப்பேரவையில் கூறினார். 

இதனால் அதிருப்தியடைந்து சட்டப்பேரவையில் இருந்து வெளிய வந்த வேல்முருகன், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அலுவல் மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என பேச முற்பட்டதை புரிந்து கொள்ளாமல், அமைச்சர் சேகர் பாபுவும், முதலமைச்சரும் தன்னை அநாகரீகமாக விமர்சித்தது தனக்கு வருத்தம் அளிப்பதாக கூறினார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம் உள்ளது போல், தமிழகத்தில் அதனை ஏன் செய்ய மறுக்கிறீர்கள் என தான் கேட்டதாகவும், ஆனால் சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

varient
Night
Day