எழுத்தின் அளவு: அ+ அ- அ
உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியது தவறு என உணர்ந்திருக்க வேண்டும் என்றும், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்திவிட்டு பாதுகாப்புக்காக உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்கள் என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தர்மம் என்பது டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது எனவும், அவற்றை அழித்து விட வேண்டும், இல்லையென்றால் அவை நம்மை அழித்துவிடும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இதற்கு எதிராக பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே மனுக்கள் அனைத்தையும் ஒரே மனுவாக சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சட்ட விதிகள் 19 மற்றும் 25 ஆகிய பிரிவுகளை மீறிய பிறகு, உதயநிதி ஸ்டாலின் தான் பேசியதன் விளைவுகள் என்ன என தெரிந்ததும் நீதிமன்றத்தை நாடி உள்ளதாகவும், கருத்து சுதந்திரத்தை மீறிய பிறகு பாதுகாப்பிற்காக உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளதாக கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும் உதயநிதி ஸ்டாலின் பேசியது தவறு என உணர்ந்திருக்க வேண்டும் என கூறிய உச்ச நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலின் சாதாரண மனிதர் அல்ல ஒரு அமைச்சரும் பொறுப்பில் உள்ளவர் என்பதையும் குறிப்பிட்டது. வெறுப்பு பேச்சு விவகாரத்தில் எங்கெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளதோ? அங்கே செல்லுங்கள் என உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கூறிய போது, உதயநிதி தரப்பில் 6 மாநிலங்களில் வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளது என்பதால் அனைத்து மாநிலங்களுக்கும் செல்வது கடினம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சனாதனம் குறித்து பேசியதன் விளைவை நன்கு அறிவதாக குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் வழக்கை ஒரு பொதுவான இடத்தில் விசாரிக்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.