எழுத்தின் அளவு: அ+ அ- அ
சமையல் எண்ணெய் இறக்குமதியின் வரி 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் 1 லிட்டர் சமையல் எண்ணெய்யின் விலை 18 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. இதனால் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் பண்டிகைகளுக்கு அதிகம் தேவையான சமையல் எண்ணெய் இறக்குமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவைகளின் இறக்குமதி வரியை 20 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இறக்குமதி வரியை தவிர மத்திய அரசால் விதிக்கப்படும், விவசாய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியுடன் சேர்த்து 27.5 சதவீதமாக சமையல் எண்ணெய் வரிகள் உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்த சமையல் எண்ணெய் தேவையில் சுமார் 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதேபோல் பிரேசில், ரஷ்யா, உக்ரைன் மற்றும் அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகளில் இடமிருந்து சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்கிறது. இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு லிட்டர் எண்ணெயின் விலை சுமார் 18 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.