சர்வதேச மகளிர் தினம் - சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, அனைத்து பெண்களுக்‍கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். எத்தகைய சோதனைகள் எதிர்நின்றாலும் அவற்றையெல்லாம் முறியடித்து, துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்தியுள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில், பெண்ணினத்தின் அன்பையும், தியாகத்தையும், கடின உழைப்பையும், பெருமைகளையும் இந்த உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது - இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் தனது இதயம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

அனைத்தையும் சமாளிக்கும் திறனையும், அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பினையும் இயற்கையாகவே பெண்கள் பெற்றுள்ளதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன் - மேலும்,"பெண்கள் எளிதில் வெளிக்கொண்டு வர முடியாத அரிய திறன் மிக்க களஞ்சியங்கள்" என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதையும் இந்நேரத்தில் நினைவுகூர விரும்புவதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது - அதனால் தான் நமது தேசத்தையே தாய்நாடு என பெயரிட்டு அழைக்கிறோம் -  

ஒரு பெண் என்பவள் தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, நல்ல தோழியாக, எல்லோரையும் அரவணைத்து செல்லும் பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களில் வாழ்நாள் முழுதும் தனது கடமையை சிறப்புடன் நிறைவேற்றுபவள் - அதேபோன்று, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் போதும் அந்த குடும்பமே மேன்மை பெறும் என்பது உலகம் அறிந்த உண்மை - பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டும் - மேலும், நமது நாட்டில் பெண்களை தெய்வமாக போற்றுவதால்தான் தாகத்தை தணிக்கும் தண்ணீரை சுமந்து செல்லும் நதிகளுக்கு காவேரி, கங்கை, யமுனை, வைகை என பெயரிட்டுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

பெண்கள் எதையும் சமாளிக்கும் துணிவுடனும் மன உறுதியுடனும் வாழவேண்டும் - இன்று பெரும்பாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது - காவல்துறை, ராணுவம், விமான மாலுமிகள், தொழில்துறை, அரசியல் என இன்னும் எத்தனையோ துறைகளில் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் -

ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் வலி நிறைந்த வாழ்க்கையை இந்த மகளிர் தின நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும் என புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய சுதந்திர வரலாற்றிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் மகளிரின் பங்கு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது - அதிலும், குறிப்பாக தமிழக பெண்களின் பங்கு மகத்தானது - தெற்கே வீரமங்கை வேலு நாச்சியார், வடக்கே ஜான்சிராணி போன்றவர்களின் வீரம் போற்றப்படுகிறது - 

பெண்கள் வாழ்வு மேம்படவும், பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்ததாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.  

பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம்; குழந்தையின் பெயருக்கு முன்பாகத் தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை இனிஷியலாகப் போட்டுக் கொள்ளும் அரசாணை, மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் "குடிமகள்" என்ற சொல்லை பயன்படுத்துதல், இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை அமைத்தது, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், குழந்தை நலப் பரிசுபெட்டகம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம்; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்கள், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்ட தனி அறைகள், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித பதவிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டம் போன்ற உன்னத திட்டங்களை அளித்து பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தோம் என்பதை இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். 

பெண்கள் நம் நாட்டின் கண்களாக இருப்பினும், இன்றைக்கும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் நடப்பது மனதுக்கு பெரிதும் வேதனை அளிக்கின்றது - அரசை வழிநடத்துபவர்கள் இது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும் என வலியுறுத்தியுள்ள புரட்சித்தாய் சின்னம்மா, பெண்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே மாற்ற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெண்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது - ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில், எத்தகைய சோதனைகள் எதிர்நின்றாலும் அவற்றையெல்லாம் முறியடித்து, துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும், அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் என வாழ்த்தி, பெண்கள் அனைவருக்கும் மீண்டும் தனது நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

Night
Day