சாதனைப் பெண்மணி முனைவர் அமுதா... சோதனைகளைக் கடந்து சாதித்த வரலாறு

எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. பெண்களைக் கொண்டாடவும், அவர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டவும் இந்த சர்வதேச மகளிர் தினம் மிகவும் முக்கியமானது. சிறப்பு மிக்க சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவரான மூத்த விஞ்ஞானி முனைவர் அமுதா ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காண்போம்...

தாயாக, மனைவியாக, மகளாக ஒரு சமூகத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பெண்கள்தான். ஒரு நாடு முன்னேற வேண்டும் என்றாலும் சரி, ஒரு குடும்பத்தில் தலைமுறையே உயர வேண்டும் என்றாலும் சரி, பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமானது. ஆண்களுக்கு எந்த வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்றாலும் கூட இன்னும் கூட பெண்களுக்கான பாகுபாடு நீடிக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் பெண்களின் முக்கியத்துவத்தை போற்றவும் அவர்களின் பிரதிநிதித்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  

இந்த சிறப்பு மிகுந்த நன்நாளில், தான் கடந்து வந்த பாதைகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவராக பொறுப்பேற்றுள்ள முனைவர் அமுதா. தென் மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்குரிய முனைவர் அமுதா, கல்வி என்னும் பேராயுதம் பெண்ணிற்கு சம உரிமையையும் சுயமரியாதையையும் பெற்றுத் தரும் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார். 

வடகிழக்கு பருவமழையின் தரவுகளை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இந்த சாதனை பெண்மணி, எளிய குடும்பத்தில் பிறந்தவர். எதிர்கொண்ட தடைகளை எல்லாம் படிக்கற்களாக மாற்றி, எதுவும் முடியும் என்பதை தாரகமந்திரமாக கொண்டு, இதுவும் கடந்து போகும் என்று இன்னல்களை எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம் என்கிறார் முனைவர் அமுதா.

வாழ்வின் கடினமான காலங்கள்தான் பெண்களுக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும் என்று உறுதிபடத் தெரிவிக்கும் முனைவர் அமுதா, உங்கள் முயற்சிகளை எந்த சூழ்நிலையிலும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத மனதிடம் அவசியம் என வலியுறுத்துகிறார்.

பெண்களுக்கு கல்விதான் மிகப்பெரிய சொத்து, படிப்பு மட்டுமே வாழ்க்கையில் ஒருவரை முன்னேற்றும் என்ற குறிக்கோளோடு படித்தால் வெற்றி நிச்சயம் என மகளிர்க்கு இந்த மகளிர் தினத்தில் ஆலோசனை வழங்குகிறார் முனைவர் அமுதா.

வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும், சாதிக்க நினைக்கும் பெண்கள் அனைவருக்கும் முனைவர் அமுதாவின் வாழ்க்கை மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

அன்பை அள்ளிக் கொடுக்கும் அன்னையாக, அறிவை வழங்கும் ஆசிரியையாக, அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்து வழிநடத்தும் மனைவியாக, தோளாது தோள் கொடுக்கும் தோழியாக வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கும் மகளிரை இந்த சிறப்பான தினத்தில் போற்றுவவோம். அவர்கள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வோம். 

Night
Day