எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் தாக்கத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோட்டில் வரலாறு காணாத வகையில், வெயில் சுட்டெரித்து வருவதற்கு மரங்கள் அழிக்கப்பட்டு தொழிற்சாலைகள் பெருகியதே காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். வெயில் கொடுமையில் சிக்கி தவிக்கும் மக்களின் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
வரலாறு காணாத வகையில் வெப்ப தாக்கத்தில் சிக்கியுள்ள ஈரோடு மாவட்டத்தின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள்தான் இவை...
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
அடுத்த ஒரு சில நாட்களுக்கு திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
அந்த வகையில், ஈரோட்டில் வெயிலின் தாக்கம் எந்த ஆண்டும் இல்லாத வகையில் 109- டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து உச்சத்தை தொட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிக வெப்பம் பதிவான பட்டியலில் ஈரோடு மாவட்டம் 3வது இடத்தை பிடித்துள்ளது அம்மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் , மக்கள் அதிகம் கூடும் இடங்களில், நீர் மோர், தண்ணீர், போன்றவற்றை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகல் நேரத்தில் வெப்பத்தை சமாளிக்க இளநீர், கரும்பு ஜூஸ், மோர் மற்றும் பழச்சாறு கடைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் படையெடுத்து தாகத்தை தீர்த்து வருகின்றனர்.
ஈரோடு நகரின் மையப் பகுதியில் இருந்து சித்தோடு வரை செல்லும் சாலையில் விரிவாக்க பணிக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு தொழிற்சாலைகள் பெருகியதே வெப்பம் அதிகரிக்க காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விவசாயம் நிறைந்த மாவட்டமாக இருந்து வந்த ஈரோடு மாவட்டத்தில் தற்போது விவசாயம் அழிக்கப்பட்டு கணிம வளங்கள் சூறையாடப்பட்டதே வெப்பம் அதிகரிக்க காரணம் எனவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மரங்கள் வெட்டுவதை மாவட்ட நிர்வாகம் கைவிட்டு, போதிய அளவு மரங்கன்றுகளை நட்டு வைக்க முன்வரவேண்டும் எனவும் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று சொல்வதுண்டு. அதற்கேற்ப வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கக் கூடிய மரங்களின் அவசியத்தை தற்போது கடுமையான வெப்பம் உணர்த்தி வருகிறது.