சாராய வியாபாரி சின்னதுரை உட்பட 3 பேர் மீது கொலை வழக்கு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி சம்பவத்தில், கள்ளச் சாராயத்தில் கெட்டுப்போன மெத்தனால் கலந்தது தொடர்பாக சின்னசேலத்தை சேர்ந்த ராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மெத்தனால் கலந்து சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18ம் தேதி கள்ளச் சாராயம் குடித்தவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதை அடுத்து, வெவ்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளச் சாராயத்துக்கு இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கள்ளச் சாராயத்தில் காலாவதியான மெத்தனால் கலந்ததே உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை விற்பனை செய்த சின்னதுரை, ஜோசப் ராஜா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சின்ன சேலத்தை சேர்ந்த ராமன் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். சின்னதுரையிடம் இருந்து இவர் மெத்தனால் வாங்கிச் சென்று கள்ளச் சாராயத்தில் கலந்து விற்பனை செய்துள்ளார். இவர்கள் 3 பேர் மீதும் கச்சிராபாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணுகுட்டி என்கிற கோவிந்தன், அவரது மனைவி விஜயா மற்றும் சகோதரர் தாமோதரன் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day