எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை அண்ணா சாலையில், நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வைரலாகி உள்ளது.
சென்னையின் அதிமுக்கிய சாலையான அண்ணா சாலையில் நேற்றிரவு நந்தனம் சிக்னலில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வாகன பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகனப் பதிவெண் இல்லாத வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக வாகனத்தை இயக்கியும், மற்ற வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் விதத்தில் வாகனம் ஓட்டினர். இது, சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் நந்தனம் சிக்னலில் இருந்து அதிவேகமாக வாகனங்களை ஓட்டிய இளைஞர்களுக்கு பின்னால் வந்த வாகன ஓட்டி ஒருவர் அதனை வீடியோ எடுத்துள்ளார். அதிமுக்கிய சாலையான அண்ணா சாலையில் வார இறுதி நாளில் இளைஞர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட சம்பவமானது சகவாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.