சிகரெட்டால் சூடு வைத்து கொடூரம்...15 வயது சிறுமி கொலை வழக்கில் பகீர் பின்னணி...

எழுத்தின் அளவு: அ+ அ-

 வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமியை சிகரெட் துண்டுகளால் சுட்டு தீக்காயங்கள் ஏற்படுத்தி, கொடூரமாகத் தாக்கி கொலை செய்துவிட்டு, ஊதுபத்தியை ஏற்றி வைத்து நாடகமாடிய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொடுமையாக தாக்கி சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.


சென்னை அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நவாஸ், பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மனைவி நாசியா மற்றும் 6 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

மனைவிக்கு வேலைப்பழுவைக் குறைப்பதற்காக, சுமார் 14 மாதங்களுக்கு முன் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியை வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியுள்ளார். சிறுமியின் தந்தை காலமானதால், குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டுக்கும் மேலாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில் கணவன்-மனைவி என இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

அதோடு நில்லாமல், முகமது நவாஸின் நண்பரான லோகேஷ் என்பவரும் வீட்டுக்கு வரும்போது எல்லாம் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த நிலையில், தீபாவளி நாளில் காலை எழுந்து வழக்கம்போல வீட்டு வேலைகளை செய்ய தொடங்கியுள்ளார் அந்த சிறுமி.

ஆனால், முஹம்மது நவாஸ், மனைவி நாசியா, இவர்களது நண்பரான லோகேஷ் ஆகியோர் சேர்ந்து அன்றும் சிறுமியைக் கொடூரமாக தாக்கி சிகரெட்டால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த சிறுமி மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து மூவரும் சேர்ந்து சிறுமியை குளியலறைக்குள் இழுத்துச் சென்று போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சில மணி நேரம் கழித்து குளியலறைக்குள் சென்று பார்த்தபோது, சிறுமி உயிர் இழந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் பயந்து போன கணவன், மனைவி ஆகிய இருவரும் குளியலறையில் ஊதுபத்தியை ஏற்றி, சிறுமியின் உடலை அங்கேயே போட்டுவிட்டு, தங்களது உறவினர்கள் வீட்டிற்கு சென்று பதுங்கியுள்ளனர். பின்னர் லோகேஷ் வாயிலாக வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்து, காவல்துறைக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அமைந்தகரை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமியின் உடலில் தீக்காயங்கள் மற்றும் சிகரெட்டினால் சுட்ட காயங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்ததால், சந்தேகமடைந்த போலீசார், கணவன்-மனைவி இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 
 
விசாரணையில் முகமது நவாஸ் அவரது சகோதரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது வீட்டிற்கு வேலைக்கு அமர்த்தியதும், தம்பதியர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதும் தெரியவந்தது. மேலும், முகமது நவாஷின் நண்பரான லோகேஷ் என்பவரும் வீட்டுக்கு வரும்போது சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. 

இதனிடையே சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களை காவல்துறையினர் பேச அனுமதிக்கவில்லை என்றும், அவர்களை காண முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியை கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில், முகமது நவாஸ் அவரது மனைவி நாசியா,  நவாஸின் நண்பரான லோகேஷ் மற்றும் அவருடைய மனைவி ஜெய்சக்தி, நவாஸின் சகோதரி சீமா மற்றும் அதே வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பணிப்பெண் மகேஸ்வரி என மொத்தம் ஆறு பேரை அமைந்தகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் விசாரணைக்குப் பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்திய நிலையில், ஆறு பேரையும் வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

குடும்ப சூழ்நிலை காரணமாக பணியாற்ற வந்த சிறுமி, குளியலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அமைந்தகரை மேத்தா நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day