சிதிலமடைந்த சுனாமி குடியிருப்புகள் அச்சத்துடன் வசிக்கும் மக்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வோளங்கண்ணி அருகே சேதமடைந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகளுக்கு பதில் புதிய வீடு கட்டித்தரும்படி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளில் அச்சத்துடன் வாழும் மக்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கடந்த 2004-இல் ஏற்பட்ட சுனாமியின் கோரத்தாண்டவத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் பறிபோகின. குறிப்பாக நாகை மாவட்டம் மிக கடுமையான பாதிப்பை சந்தித்தது. வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில், பல்லாயிரக்கணக்கான மரங்கள், வீடுகள், கடல்நீரில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் சுனாமியில் வீடுகளை இழந்து நிர்கதியாக நின்ற ஏழை எளிய மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டன. 

கடலுக்கு அருகே ஒரு கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வசித்து வந்தவர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட்டன. இதில் புதுப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 132 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட நிலையில், 20 வருடங்களை கடந்துள்ள அந்த வீடுகள் தற்போது சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன.

சுவர்கள், மேற்கூரை என கட்டடங்களின் அனைத்து பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டு, மழைக் காலங்களில் ஒழுகும் நிலை காணப்படுகிறது. மேலும், எந்நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் கட்டடங்கள் மோசமான நிலையில் உள்ளதாக குடியிருப்புவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்த வரும் நிலையில், சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அருகில் உள்ள சமுதாய கூடங்கள் மற்றும் பள்ளி கட்டடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், சிலர், தற்காலிக கூடாரம் அமைத்து அதில் வசித்து வருகின்றனர்.

வசிப்பதற்கு பாதுகாப்பான இருப்பிடம் இல்லாமல் தவித்துவரும் தங்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக புதிய வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day