எழுத்தின் அளவு: அ+ அ- அ
சங்கரன்கோவில் அருகே காதில் காயமடைந்த மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லை என கூறி, நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தள்ளாடும் வயதில் சிகிச்சை பெற முடியாமல் மூதாட்டி அலைக்கப்பட்ட அவலம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...
தென்காசி மாவட்டத்தின் 2வது மிகப்பெரிய மருத்துவமனையான சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இம்மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது...
இந்தநிலையில் சங்கரன்கோவில் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி வெள்ளத்தாய் என்பவர், கீழே விழுந்து காது பகுதியில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மகன் கண்ணன், வெள்ளத்தாயை சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். வெள்ளத்தாயை பரிசோதித்த மருத்துவர் கலை மனோபாரதி, மூதாட்டிக்கு காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், காது மூக்கு தொண்டை நிபுணர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் இங்கு அந்த வசதி இல்லாததால், நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஆம்புலன்ஸ் இல்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டியை நோயாளிகள் நடந்து செல்லும் நடைபாதையில் அமர வைத்து நீண்ட நேரம் காக்க வைத்துள்ளனர். இந்த சம்பவம், அவரது உறவினர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் சங்கரன்கோவில் அரசு பொது மருத்துவமனையில், சிறப்பு மருத்துவர்கள் இல்லாதது விளம்பர திமுக அரசின் செயலற்ற நிர்வாகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஏழை எளிய மக்களின் வரப்பிரசாதமாக திகழும் அரசு மருத்துவமனைகளில், போதிய மருத்துவர்கள் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.